Saturday, February 28, 2009

சுஜாதா - ஆண்டு 1 - அரங்கன் நலமா?


எனக்கும் வாத்தியாருக்கும் என்ன உறவு என்று நினைக்கும்போது, தேசிகன் சொல்வது போல் "நமக்கிங்கு உறவேல் ஒழிக்க ஒழியாது" என்றெல்லாம் கூற முடியாது. பரிச்சயம் அத்தனையும் அவரது எழுத்துக்களுடன் மட்டுமே. அம்பலம் சாட்டில் ஒரே ஒரு முறை பேசியிருக்கிறேன்.

அவரை எப்போது வாசிக்க ஆரம்பித்தேன் என்று கரெக்டாக சொல்ல முடியவில்லை. ஆனால், ஆரம்பித்தது கணேஷ்-வசந்த கதைகளிலிருந்து. அப்பருவத்தில், ஒரு பிரச்சினையை அணுகும் கணேஷின் திறமையும், வசந்த்தின் சுட்டித்தனமும், ஜொள்ளும் உடனடியாக ஒரு ஈர்ப்பை உண்டு பண்ணியது. கமல், ரஜினி என்று நடிகர்களுக்கு, அவர்கள் படங்களைப் பார்த்து தீவிர ரசிகர்கள் அமைகிறார்கள். ஆனால், சுஜாதா ஆணா/பெண்ணா என்று கூடத் தெரியாமல், அவரது தனித்துவமான எழுத்து என்ற அடையாளத்தின் பேரில் மட்டும், தீவிர ரசிகராகி, அவரை வாத்தியாராக ஏற்றுக் கொண்ட அக்கால இளைஞர் அனேகர். அடியேனும் அந்த கூட்டத்தில் ஒருவன்.

"பிரிவோம் சந்திப்போம்" ஏற்படுத்திய தாக்கத்தில், பல ஆண்டுகளுக்குப் பிறகு பிறக்கவிருக்கும் மகளுக்கு மதுமிதா என்று பெயரிட்டேன் :)

அந்த subtle (உறுத்தாத) ஹியூமர் அவர் எழுத்துகளில் (அது கதையோ/கட்டுரையோ) விரவி இருக்கும். Non technical ஆசாமிகளுக்குக் கூட புரியும்படியாக, அதே சமயம் சுவாரசியமாக நவீன டெக்னிகல் சமாச்சாரங்களைக் கூட, ஒரு கதை சொல்வது போல சொல்ல ஒரு ஆள் பிறந்து வர, பலப்பல ஆண்டுகள் ஆகலாம்.

இங்கு தமிழ் எழுத்தாளர்களுக்கு பஞ்சமில்லை. அது போல, டெக்னிகல் ஆட்களுக்கும் பஞ்சமில்லை. வாத்தியார் போல எஞ்சினிய்ராக, விரிந்த வாசிப்போடு, ஆங்கிலம்/தமிழ் என்று இரண்டிலும் மிக்க புலமையோடு, மிக்க தன்னடகத்துடன் ஒரு ஆசாமி சல்லடை போட்டுத் தேடினாலும் கிடைக்கப் போவதில்லை :(

இந்த வருட புத்தக கண்காட்சியில், உயிர்மையில் அவரது "கண்ணீரில்லாமல்" என்ற சிறு கட்டுரைத் தொகுப்பை வாங்கினேன். என்ன அது "கண்ணிரீல்லாமல்" என்று பார்த்தால், வாத்தியார் யாப்பு, கர்னாடக/மேற்கித்திய சங்கீதம், ஐன்ஸ்டைன், இந்து மதம் ஆகிய சமாச்சாரங்களை நாம் ரொம்பவும் அழாமல் தன்னிடமிருந்து தெரிந்து கொள்ள அழைக்கிறார் என்று விளங்கியது :) நிஜமாகவே, யாப்பிலக்கணத்தை தெளிவாக புரிந்து கொள்ள முடிந்தது, ஒரே வாசிப்பில், மனதில் நிற்கும் வண்ணம்!

அதான் வாத்தியார் எழுத்தின் சக்தி. யாப்பு சொல்லித் தரும்போது கூட அந்த நகைச்சுவை இருக்கிறதே, "தமிழ் பண்டிதர்களிடம் போகாதீர்கள். "எட்டடி தரவு கொச்சக் கலிப்பா" போன்ற சொற்கள் எல்லாம் கனவில் வந்து பயமுறுத்தும்" என்பார்! யாப்பு பற்றி இதை விட எளிமையாக யாரும் விளக்க முடியாது.

அது போல, 'ரத்தம் ஒரே நிறம்' நாவலில், முத்து என்ற நாவலின் கதாநாயகனுக்கும், மெக்கன்ஸி என்ற பரங்கியனுக்கும் நடக்கும் "கட்டிப்புடி" சண்டையை வர்ணிக்கும்போது, 'முத்து மேல் மெக்கன்ஸி.. மெக்கன்ஸி மேல் முத்து... நிலைமை சற்று குழப்பமாக இப்போது முத்துன்ஸியாக உருண்டார்கள்' என்பார் :)

இரண்டு பதிவுகளில் வாத்தியாரை "இன்னுமோர் நூற்றாண்டு இரும்" என்று வாழ்த்தியிருக்கிறேன், அதாவது 200 ஆண்டுகள். சொல்லி 3 ஆண்டுகளுக்குள் அரங்கனைப் பார்க்க புறப்பட்டுப் போய் விட்டார். இல்லை, அவருக்கு மிகவும் பிடித்த திருமங்கையாழ்வாராகக் கூட இருக்கலாம்!

வாத்தியாரின் மறைவுக்குப் பிறகு வலைப்பதிவர்கள் எழுதிய அஞ்சலிப் பதிவுகளின் இணைப்புகள் இந்த எனது பதிவில் உள்ளன

சுஜாதா தன்னைப் பற்றி: என் எழுத்து, என்னைப் பல தேசங்களுக்கு அழைத்துச் சென்றிருக்கிறது. பல வகைப்பட்ட மனிதர்களைச் சந்திக்க வைத்திருக்கிறது. பிரைவேட் ஜெட்டி லிருந்து ஃப்ரீமாண்ட் மிஷன் பீக் மலை யுச்சி மாளிகை வரை அனுமதித்திருக்கிறது. பெயர் தெரியாத வாசகர்கள் நள்ளிரவில் கூப்பிட்டுப் பாராட்டியிருக்கிறார்கள். மனைவிமார்கள் அழுதிருக்கிறார்கள். கணவன்கள், மனைவிகள் மேல் சந்தேகப்பட்டுத் தற்கொலை செய்து கொள்ளுமுன், கடைசி ஆறுதலுக்கு என்னை விளித்திருக்கிறார்கள். ரோஜா வெளிவந்த சமயத்தில், பெங்களூருக்குத் தனியாக ஓடி வந்த இளம்பெண் அதிகாலை ஜலஹள்ளியில், அரவிந்த சாமியுடன் என்னை மண முடி! என்று கதவைத் தட்டி யிருக்கிறாள். "ஆ" கதையைப் படித்துவிட்டு, "என் மகளை மணம் செய்துகொள்ள வேண் டும்" என்று திருநெல்வேலில் இருந்து வந்த மனநிலை சரியில்லாத இளைஞரும், பாலம் கதையைப் படித்து விட்டு என்னைக் கொல்ல வர தேதி கேட்டிருந்த கோவை வாசியும் என் வாசகர்கள்தான். வாழ்க்கையின் அத்தனை பிரச்னைகளுக்கும், முதுகுவலியில் இருந்து முண்டகோபனிஷத் வரை யோசனை சொல்லியிருக்கிறார்கள்; கேட்டிருக்கிறார்கள். மிகச் சிறந்த நண்பர்களையும், அற்புதக் கணங்களையும் என் எழுத்தால் பெற்றிருக்கிறேன். அதுதான் என்னுடைய நோபெல்!

Monday, February 23, 2009

528. ஈழததமிழர் ஆதரவாக சென்னையில் நடந்த அமைதிப்பேரணி

நேற்று இனஒழிப்புக்கு எதிரான இந்தியர்கள் என்ற அமைப்பு (இலங்கை அரசின் இன ஒழிப்பை எதிர்த்து)ஏற்பாடு செய்திருந்த அமைதிப் பேரணியில் கலந்து கொண்டேன். பெரிய அளவில் கூட்டம் இல்லை என்றாலும், மக்களின் உணர்வை புரிந்து கொள்ள முடிந்தது. சில புகைப்படங்கள் எடுத்தேன். 2 சிறு ஓட்டப் படங்களும் (வீடியோ) எடுத்தேன்.



ஃபாதர் ஜெகத் காஸ்பர் முன்னின்று நடத்திய பேரணி இது. War Memorial இல் தொடங்கிய நடைப்பேரணி ஓமந்தூரார் அரசினர் மாளிகையில் நிறைவடைந்தது. ஜெகத் காஸ்பர் சிறு உரை நிகழ்த்தினார். 7 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. கீழே உள்ள படத்தை கிளிக் செய்து பெரிதாக்கி வாசிக்கலாம்.



முல்லைத்தீவு பகுதியில் 220000 தமிழர்கள் அவல நிலையில் தவிக்கையில், இலங்கை அரசு அங்கு 70000 பேர் இருப்பதாக பொய்ச் செய்தியை பரப்பி வருகிறது. வரும் வாரங்களில், போர் என்ற பெயரில், தமிழர்களை அழிப்பதற்கான சதியோ என்று அஞ்சுவதற்கு முகாந்திரம் இருக்கிறது. எப்படியாயினும், போர் உடனடியாக நிறுத்தப்பட வேண்டும். புலிகளும், இலங்கை அரசும் பேச்சு வார்த்தை நடத்தியே ஆக வேண்டும், அப்பாவி தமிழர்களின் நல வாழ்வுக்காக. புலிகள், தாங்கள் தயார் என்று கூறியதாக ஒரு செய்தி இன்று பார்த்தேன்.




எந்த சாதி/மதத்தை சேர்ந்தவராக இருந்தாலும், விடுதலைப்புலி ஆதரவு/எதிர்ப்பு நிலை எடுத்தவராக இருப்பினும், தனி ஈழத்தில் நம்பிக்கை வைத்திருந்தாலும் / இல்லாவிட்டாலும், இந்த சமயத்தில் பேராபத்தில் சிக்கியிருக்கும் , மிக்க அவல நிலையில் உழன்று கொண்டிருக்கும் ஈழத்தமிழருக்கு ஆதரவாக, கொடுங்கோல் சிங்கள அரசுக்கு எதிராக, மனிதாபிமான அடிப்படையில் குரல் கொடுக்க வேண்டும்!

..பாலா

Friday, February 20, 2009

527. திறந்தவெளிச் சுடுகாடாகும் ஈழத் தீவு!

ஈழத்தமிழருக்கு ஆதரவாக குரல் கொடுத்து, விகடனில் வந்துள்ள கட்டுரை இது. விகடனுக்கு நன்றி. இதை ஆங்கிலத்திலும் மொழி பெயர்த்து யாராவது வெளியிட வேண்டும். சிங்கள அரசின் அராஜகம், இன்னும் பலருக்கும் தெரிய வரும்!
எ.அ.பாலா
**********************************************

மகான் ரஜ்னீஷ் சொன்ன கதை, மகிந்தா ராஜபக்ஷேவுக்கும் பொருந்தும்!

மன்னன் ஒருவனின் கனவில் மரணம் தோன்றியது. 'உன்னைக் குறித்த நேரத்தில்,குறித்த இடத்தில் சந்திப்பேன்' என்றது. அதிலிருந்து தப்பிக்க,புத்திசாலிகள் அத்தனை பேரையும் அழைத்து ஆலோசனை கேட்டான். 'இவர்கள் முடிவுக்கு வருவதற்கு முன் மரணம் வந்துவிடும்.

எனவே, உன்னிடம் வேகமாக ஓடும் குதிரையை எடுத்துக்கொண்டு ஓடிப் போய்விடு' என்று ஒரு கிழவன் ரகசியமாகச் சொன்னதும் குதிரையை எடுத்துக்கொண்டு கிளம்பினான்.

18 மணி நேரம் ஓடியது குதிரை. 'அப்பாடா... இந்த இடத்துக்கு மரணத்தால் வர முடியாது' என்று மன்னன் பெருமூச்சுவிட்டுக் கீழே இறங்கி மரத்தடியில் உட்கார்ந்தான். தோளில் ஒரு கை விழுந்தது. 'சபாஷ்! இந்த இடத்துக்கு நீ நிச்சயம் வருவாய் என்றுதான் காத்திருக்கிறேன்' என்று பாசக் கயிற்றை வீசியதாம் மரணம்.

அந்த எமன் வீசியது பாசக் கயிறு. சிங்கள எமகாதகர்கள் வீசுவதற்குப் பெயர் பாதுகாப்பு வளையம். 'உயிருக்குப் பயந்தவர்கள் இங்கே வாருங்கள்' என்று அழைத்து, குண்டுபோட்டுக் கொல்கிறார்கள். அது பாதுகாப்பான மயானங்கள்!

எத்தனை தடவைதான் ஈழத்தின் சோகத்துக்கும் கொடூரத்துக்கும் வேறு வேறான வார்த்தைகளைத் தேட! வார்த்தைகள் தீர்ந்தாலும் வதைகள் தொடர்கின்றன. கடைசித் தமிழன் உயிரோடு இருக்கும் வரை அது தொடர்ந்து தொலைக்கத்தான் செய்யும்!

இப்போது ராணுவத்தின் இலக்கு புலிகள் அல்ல, அப்பாவித் தமிழர்கள். 'புலிகளை ஒழித்துவிட்டால், அடுத்து தமிழர்களுக்கு எதையாவது செய்தாக வேண்டிய நிர்பந்தம் இருப்பதால், ஒட்டுமொத்தத் தமிழர்களையும் மொத்தமாக முடித்துவிட்டு, புலிகள் பக்கம் திரும்ப சிங்கள அரசு சதித் திட்டம் தீட்டுகிறது. 'அப்பாவிகளைக் கொல்லாதே!' என்று பல்வேறு உலக நாடுகள் நெருக்கடி கொடுத்ததும், அதை மறைப்பதற்கான தந்திரத்தை மகிந்தா அரசு யோசித்தது. அவர்கள் கண்டுபிடித்தது 'பாதுகாப்பு வளையம்' என்ற வார்த்தை.

பொதுவாக போர்கள் நடக்கும்போது, மருத்துவமனைகள், மத வழிபாட்டு இடங்கள், பள்ளிக்கூடங்கள் போன்ற இடங்களும் அதைச் சுற்றியுள்ள இடங்களும் 'பாதுகாப்பான இடங்கள்' என அறிவிக்கப்படும். அங்கு குண்டுகள் வீசக் கூடாது என்பது உலக நீதி. ஆனால், எல்லா அநீதிகளையும் மொத்தக் குத்தகைக்கு எடுத்துக்கொண்ட ராஜபக்ஷே அரசு, அதைப் 'பாது காப்பு வளையம்' என்கிறது.

'சில பகுதிகளைப் பாதுகாப்பு வளையமாக அறிவித்துள்ளோம். அங்கு பொதுமக்கள் வந்துவிட வேண்டும். இதற்கு 48 மணி நேரம் கெடு' என்று சிங்கள அரசு அறிவித்தது. அதாவது, மக்களை காட்டை விட்டு வெளியில் வரச் சொல்லி, கெடு விதித்தது. இதைத்தான் இங்குள்ள காங்கிரஸ் கட்சி, 48 மணி நேரப் போர் நிறுத்தம் என்று சொல்லிப் பெருமைப்பட்டது. இப்படி ஒரு தகவல் அறிவிக்கப்பட்டதுமே அப்போது கொழும்பில் இருந்த ஐ.நா. அதிகாரி ஒருவர், 'தமிழர் வாழ்வதற்குப் பாதுகாப்பான இடம் என இலங்கையில் ஓர் அங்குலம்கூட இல்லையே? எங்கு வரச் சொல்கிறார்கள்?' என்று கிண்டலடித்தார்.

காட்டுக்குள் பல மாதங்களாக அடைந்துகிடக்கும் அப்பாவி மக்களில் சிலர், அரசாங்கத்தின் வார்த்தையை நம்பி, அந்தப் பாதுகாப்பான இடத்துக்கு வர, அங்கு போய் குண்டு போட்டுக் கதையை முடிக்கிறது சிங்கள அரசு.

இங்கு மக்கள் படும் சிரமங்கள் ஜெயவர்த்தனே காலத்தைவிடப் பல மடங்கு மோசமானது. ''எங்கள் மக்கள் முல்லைத் தீவுக் காட்டுப் பகுதிக்குள் மட்டும் இரண்டரை லட்சம் பேர் இருக்கிறார்கள். யாருக்கும் வீடு கிடையாது. குடிசை கிடையாது. வெறும் சாக்கு, பிளாஸ்டிக் பாய்களை வைத்து மரங்களுக்கு மத்தியில் இருக்கும் அகலத்தில் டென்ட் போட்டுத் தங்கி இருக்கிறார்கள்.

பெரும்பாலான நேரம் பதுங்கு குழிகளில்தான் எல்லாரும் இருக்கிறார்கள். காலைக் கடன்கள் கழிப்பது, சமையல் நேரம் தவிர மற்ற நேரம் முழுவதும் பதுங்கு குழியில்தான். இரவு பகலாக குழிக்குள் உட்கார்ந்திருக்கும் அவஸ்தையைச் சொல்லிப் புரியவைக்க முடியாது. விமானம் வரும் சத்தம்
கேட்டால், அத்தனை பேரும் பூமிக்குக் கீழே புதைந்து கிடப்பார்கள். குண்டு விழுந்தால் அப்படியே சமாதி!''

முல்லைத் தீவு மாவட்டம், தேவிபுரம், வள்ளிபுனத்திலிருந்து இடம்பெயர்ந்து அதிகாலையில் மூன்று குடும்பங்கள் வந்து சேர்ந்தன. ஐந்து மணி இருக்கும். அந்த நேரம் பார்த்து அவர்கள் மீது குண்டுகள் விழுந்தன. 19 பேர் அந்த இடத்தில் செத்துப்போனார்கள். 61 பேர் பலத்த காயமடைந்து துள்ளத் துடிக்கக்
கிடந்தனர். காயம் அடைந்தவர்களை முல்லைத் தீவு மருத்துவமனைக்குக் கொண்டுபோய்ச் சேர்த்தார்கள். மதியம் ஒரு மணிக்கு அங்கும் விழுந்தது குண்டு. காயம்பட்டு வந்தவர்கள், அங்கேயே பிணமானார்கள். இது நடந்தது கடந்த 12-ம் தேதி.

அதற்கு முந்தைய நாள் தேவிகுளம் நோக்கி நள்ளிரவு 3.15 மணிக்கு நடந்து வந்துகொண்டு இருந்த 22 பேர் குண்டுவீச்சில் செத்தார்கள். இடம்பெயர்ந்து வருபவர்கள் தாற்காலிகமாகத் தங்கியிருக்கும் கொட்டகைகள் மீதும் குண்டுகள் விழுகின்றன. காயம்பட்டவர்கள் சிகிச்சை பெறும் மருத்துவமனைகள் மீதும் தாக்குதல்கள் தொடர்கின்றன. புதுக்குடியிருப்பு பொன்னம்பலம் மருத்துவமனை மீது கடந்த 6-ம் தேதி விழுந்த குண்டுவீச்சில் 61 பேர் இறந்துபோனார்கள். 'ஆஸ்பத்திரிக்குப் போனா, சாவுதான்' என்பது தமிழகத்தில் ஜோக். ஈழத்தில் அதுதான் கடைசி ஷாக்!

மருத்துவமனைகளுக்கும் எந்த மருந்தையும் கடந்த ஆறு மாதமாக வரவிடவில்லை. வந்தவை அனைத்தும் காலியாகி, வெறும் பேண்டேஜ்கள் மட்டும் வைத்து, வாசலில் பாய் விரித்துப் படுக்கவைத்துவிடுகிறார்கள். வலியால் துடிப்பவர்களைப் பார்த்து டாக்டர்கள், நர்ஸ்கள் அதிர்ச்சி அடைவதில்லை. அவர்களிடம் வேறு வழியும் இல்லை. முல்லைத் தீவு, கிளிநொச்சி மாவட்டத்திலுள்ள 8 மருத்துவர்கள், நூற்றுக்கும் மேற்பட்ட மருத்துவ ஊழியர்களை அங்கிருந்து வெளியேற கொழும்புவில் இருந்து உத்தரவு. இனி சும்மா படுக்கவைத்து கட்டுப் போடக்கூட ஆள் இருக்க மாட்டார்கள். இப்படி எல்லா மருத்துவமனைகளும் அறிவிக்கப்படாத சுடுகாடுகளாக மாறிவிட்டன.

மிக அதிக பாதிப்புக்கு உள்ளானவர்களைக் கப்பல் மூலம் வேறு மாவட்ட மருத்துவமனைகளுக்குக் கொண்டுபோக செஞ்சிலுவைச் சங்கம் முயற்சி எடுத்தது. முல்லைத் தீவு மாத்தளன் கடலில் இந்தக் கப்பலை ஒரு மணி நேரத்துக்கு மேல் நிறுத்த கடற்படை அனுமதிக்கவில்லையாம். சுமார் 240 பேர் மட்டும் அவசர அவசரமாக கப்பலில் ஏற்றப்பட்டார்கள். மற்றவர்கள் நொந்துபோய் அங்குள்ள மருத்துவமனையிலேயே தங்கவைக்கப்பட்டுள்ளார்கள். இதோடு செஞ்சிலுவைச் சங்கமும் வெளியேறிவிட்டது.

இன்னொரு பக்கம் பார்த்தால்....

உயிருடன் பாதுகாப்பு வளையத்துக்குள் வருபவர்கள் தனித் தனியாகப் பிரித்து அழைத்துச் செல்லப்படுகிறார்கள். இதில் முதியோர்கள், குழந்தைகள் வேறு பக்கமும் இளைஞர்கள், இளம் பெண்கள் தனியாகவும் அனுப்பப்படுகிறார்கள். சோறு, தண்ணீர் இல்லாத இடங்களில் முதியோர்கள் அவஸ்தைப்பட... இளைஞர்கள், இளம் பெண்களுக்கான சித்ரவதை இன்னொரு புறம் ஆரம்பமாகிறது.

விசாரிக்கப்போவதாக ராணுவப் புலனாய்வு அதிகாரிகள் வருவார்கள். ''இளைஞர்களை முடிந்த வரை கொடுமைப்படுத்திவிட்டுச் சுட்டுவிடுவது இவர்களின் வேலை. வேறு எதுவும் விசாரணை செய்வதில்லை. பெண்களுக்கு நடக்கும் கொடுமைகள், கோரங்களின் உச்சம். இளம்பெண்களின் கண்களை முதலில் கட்டுவார்கள். கைகளைப் பின்புறம் சேர்த்துக் கட்டுவார்கள். அதன் பிறகு அவர்களின் ஆடைகளைக் கிழித்து அம்மணமாக்கிவிட்டு, உதைத்து ஓடவிடுகிறார்கள். எங்கு போகிறோம்... என்ன நடக்கப் போகிறது என்றே தெரியாமல், பயத்தில் ஒரு பெண் ஓட, வாய்ப்பான வசதியான இடங்களில் சிங்கள மிருகங்கள் தங்கள் பாலியல் கொடுமைகளை அரங்கேற்றும். எத்தனையோ பேர் அவள் மீது விழுந்து புரண்ட பிறகு, அவள் உறுப்புகளைச் சிதைத்து சுட்டுக் கொன்றுவிடுவதுதான் அங்கு நடக்கிறது'' என்று சொல்லப்படும் தகவல்களைக் கேட்கவே நெஞ்சு நடுங்குகிறது.

அனுராதபுரம், பொலநறுவை மயானங்கள், அதை ஒட்டிய காட்டுப் பகுதிகள், வவுனியாவின் ஆள் நடமாட்டமில்லாத இடங்களில்தான் இந்தக் கொடூரக் கற்பழிப்புகள் அதிகம் நடக்கின்றனவாம். அனுராதபுரத்தில் இருந்து கொழும்புக்கு வேலைக்குப் போன சிங்களத் தொழிலாளர்கள், தங்கள் பகுதிகளில் பல பெண்களின் பிணங்கள் நிர்வாணமாகக் கிடந்ததாக வெளியில் சொன்னார்கள். வன்னியில் இருந்து தங்கள் உயிரைக் காப்பாறிக்கொள்ள வவுனியாவுக்கு அடைக்கலம் புகும் மக்களைக் காப்பாற்றுங்கள் என்பதுதான் இப்போதைய ஈழமக்களின் கோரிக்கையாக இருக்கிறது.

புலிகள் வசம் இருக்கும் புதுக் குடியிருப்பையும், அதைத் தாண்டிய முல்லைத் தீவையும் கைப்பற்றி ஏக இலங்கையை பிப்ரவரி முதல் நாள் விடுதலை செய்யப்போவதாக அறிவித்த மகிந்தா ராஜபக்ஷே அரசு, இரண்டு வாரங்களைக் கடந்த பிறகும் அந்தச் செய்தியை அறிவிக்காமல் மக்களைக் கொல்வதில் அக்கறையுடன் இயங்கி வருகிறது. இலங்கையில் இருக்கும் தமிழர்கள் அனைவரும் புலிகள் இயக்கத்துடன் தொடர்புடை யவர்கள் என்று சிங்களக் கட்சிகள் சொல்ல ஆரம்பித்துள்ளன. ஜனதா விமுக்தி பெரமுனா அமைப்பு, 'தமிழர்கள் யாரையும் விடக் கூடாது' என்று அரசுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது. அதற்குக் காத்திருந்தது மாதிரி, கோத்தபய ராஜபக்ஷே ஓர் அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.

''புலிகள் கட்டுப்பாட்டில் இருக்கும் மக்கள் பாதுகாப்பு வளையத்துக்குள் வர வேண்டும். அவர்களுக்கு பொது மன்னிப்பு வழங்குவதா, இல்லையா என்று நாங்கள் இன்னும் முடிவெடுக்கவில்லை. புலிகள் தங்கள் வசமிருந்த மக்கள் அனைவருக்கும் ஆயுதப் பயிற்சி கொடுத்துள்ளார்கள். எனவே, அனைவரும்
புலிகள்தான். ஒரு குடும்பத்தில் யாரோ ஒருவர் இறந்த மாவீரராகவோ அல்லது இப்போது அமைப்பில் இருக்கும் போராளியாகவோ உள்ளார்கள். எனவே, எந்தக் குடும்பமும் எங்களுக்கும் புலிகளுக்கும் சம்பந்தம் இல்லை என்று சொல்ல முடியாது. மருத்துவமனைகளைத் தாக்குவதாகச் சொல்கிறார்கள். அதுவும் எங்களின் ராணுவ இலக்குதான்'' என்று தெளிவாக அறிவித்துவிட்டார் கோத்தபய ராஜபக்ஷே.

''இன்னும் ஐந்து மாத காலத்துக்கு நித்தமும் இந்த தாக்குதலைத் தொடர சிங்கள
தரப்பு முடிவெடுத்துள்ளதாகக் கூறப்படுகிறது. அப்புறம் மயானக் கரைக்கு வெள்ளையடித்து ரிப்பன் கட் பண்ணப்போகிறதா ஐ.நா.சபையும் உலக சமுதாயமும்?'' என்று ஈழ மக்கள் கதறுகிறார்கள்.

அது பற்றி நமக்கென்ன கவலை?

நமக்கு இலங்கையை கிரிக்கெட்டில் ஜெயித்தது போதும்தானே!.

Thursday, February 19, 2009

526. நீதிக்குத் தலைகுனிவு - தினமணி தலையங்கம்

கட்டாயம் வாசிக்கப்பட வேண்டிய கட்டுரை

உயர் நீதிமன்ற நீதிபதிகளின் முன்னால் சுப்பிரமணியன் சுவாமி வழக்கறிஞர்களால் தாக்கப்பட்ட சம்பவத்தைப் பார்க்கும்போது, இங்கே நடப்பது மக்களாட்சிதானா, இது நல்லாட்சியா என்கிற கேள்வியை எழுப்பாமல் இருக்க முடியவில்லை.

எந்தவொரு மனிதனுக்கும் தனது கருத்துகளை நியாயமான முறையில் எடுத்துச் சொல்லும் உரிமை உண்டு. அதை ஏற்பதும் ஏற்காததும் அவரவர் விருப்பத்தைப் பொருத்த விஷயம்.

உயர் நீதிமன்றத்தில் நடந்தேறிய சம்பவத்தில் அதிர்ச்சி அளிக்கும் விஷயங்கள் மூன்று. நீதிபதிகளின் முன்னால், நீதிமன்ற அறையில் தாக்குதல் நடத்தும் அளவுக்கு ஒரு கீழ்த்தரமான மனநிலையுடையவர்கள் வழக்கறிஞர்களாக இருக்கிறார்கள் என்பது முதலாவது அதிர்ச்சி. கறுப்புச் சீருடை அணியாமல் முன்கூட்டியே திட்டமிட்டு, கையில் முட்டையுடன் நீதிமன்ற அறையில் வந்து அமர்ந்திருக்கிறார்கள் என்றால் இவர்கள் வழக்கறிஞர்கள் என்பதைவிட கிரிமினல்கள் என்பது அல்லவா உண்மை! இது இரண்டாவது அதிர்ச்சி. மூன்றாவது, நீதிபதி மிஸ்ரா மற்றும் நீதிபதி சந்துரு இருவரும் இருக்கும்போது, அவர்கள் கண் முன்னால் இப்படியொரு அராஜகத்தை அரங்கேற்றி இருக்கிறார்கள் என்றால், நீதிபதிகளுக்கு இந்த வழக்கறிஞர்கள் எந்த அளவுக்கு மரியாதை கொடுக்கிறார்கள் என்பது.

சமீபகாலமாகவே, சட்டப்படிப்பு படித்து விட்டதாலேயே சட்டத்தைத் தாங்கள் மதிக்க வேண்டியதில்லை என்கிற மனோபாவம் பல வழக்கறிஞர்களிடம் ஏற்பட்டிருக்கிறதோ என்றுகூடத் தோன்றுகிறது. கடந்த ஆண்டு சென்னை எழும்பூர் பெருநகர் குற்றவியல் நீதிமன்றத்தில், முருகானந்தம் என்கிற நீதிபதியை, நீதிமன்ற வளாகத்திலேயே நீதிபதிகள் தாக்கிய சம்பவம் அதிர்ச்சி அலையை ஏற்படுத்தியது. கடந்த பிப்ரவரி மாதம் நடந்த பொது வேலை நிறுத்தத்தின்போது, பிராட்வே பகுதியில் ஒரு சைக்கிள் கடையை 24 வழக்கறிஞர்கள் சூறையாடியதும், அவர்களைக் கைது செய்யப்போன காவல்துறையினரையே அவர்கள் தாக்க முற்பட்டதும் வழக்கறிஞர் சமுதாயத்துக்கே தலைகுனிவை ஏற்படுத்தியது.

வழக்கறிஞர்களின் அத்து மீறிய செயல்கள் நாளுக்கு நாள் அதிகரித்தவண்ணம் இருப்பது, எந்த அளவுக்கு ஒரு கௌரவமான, மரியாதைக்குரிய தொழில் சீரழிந்திருக்கிறது என்பதை உணர்த்துகிறது. முன்பொருமுறை, அலாகாபாத் நீதிமன்றத்தில் காவல்துறையினரைப் பற்றி குறிப்பிடும்போது, "யூனிஃபாரத்தில் உலவும் ரௌடிகள்' என்று ஒரு நீதிபதி விமர்சித்தார். பிறகு அந்தக் கருத்து திரும்பப் பெறப்பட்டது என்பது வேறு விஷயம். இப்போது, அதே கருத்து வழக்கறிஞர்களுக்கும் பொருந்திவிடும் நிலைமை ஏற்பட்டுவிடும் போலிருக்கிறதே!

விடுதலைப் புலிகளை எதிர்க்கிறார் என்பதற்காக சுப்பிரமணியன் சுவாமியைத் தாக்கினார்கள் என்பதை ஏற்றுக்கொள்ள முடியவில்லை. அப்படியானால், மாங்கொல்லையில் பொதுக்கூட்டம் நடத்தி விடுதலைப் புலிகளை விமர்சித்த மத்திய உள்துறை அமைச்சர் ப. சிதம்பரத்தையும் அல்லவா இவர்கள் தாக்கி இருக்க வேண்டும்? ஒருவேளை, அதற்கு தைரியமில்லாத காரணத்தால், சுப்பிரமணியன் சுவாமியைத் தாக்கித் தங்களது வீரத்தைப் பறைசாற்ற நினைத்தார்களோ, என்னவோ!

எந்த அளவுக்குத் தரந்தாழ்ந்தவர்களாக இருந்திருந்தால், நீதிமன்ற வளாகத்தில் தாக்குதல் நடத்திய அந்த மூன்றாம்தர வழக்கறிஞர்கள் (அவர்களை வேறு எப்படித்தான் அழைப்பது?) தாங்கள் வழக்காடும் நீதிமன்றத்தில், நீதிபதிகளின் முன்னால் முட்டைவீசித் தாக்குதல் நடத்தி இருப்பார்கள்? இதில் வேடிக்கை என்னவென்றால், நீங்களோ நானோ இதுபோல நடந்திருந்தால் அடுத்த வினாடியே, நீதிமன்ற அவமதிப்பு என்கிற பெயரில் நாம் சிறைச்சாலைக்கு அனுப்பப்பட்டிருப்போம்.

எழும்பூர் பெருநகரக் குற்றவியல் நீதிமன்ற வளாகத்தில் நீதிபதியைத் தாக்கிய வழக்கறிஞர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டதா? இல்லை. "சமரசம்' ஏற்பட்டு விஷயத்துக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டு விட்டது. இதேபோல, வழக்கறிஞர்களின் சட்டவிரோதமான செயல்கள் பலதும் கண்டும் காணாமலும் நடவடிக்கை எடுக்கப்படாமலும் விடப்படுகின்றன. நடவடிக்கை எடுத்தால், வழக்கறிஞர்கள் நீதிமன்றப் புறக்கணிப்பில் ஈடுபடுவார்கள். அதனால், பொதுமக்களும் பாதிக்கப்படுவார்கள், நீதிபதிகளும் பாதிக்கப்படுவார்கள் என்பதால் நடவடிக்கை எதுவும் எடுக்கப்படுவதில்லை.

தாக்குதலில் ஈடுபட்ட வழக்கறிஞர்கள் யார் என்பது நன்றாகத் தெரியும். தலைமை நீதிபதியோ, நீதிபதிகளோ இவர்களை நீதிமன்ற அவமதிப்புக்காக, தண்டிப்பார்களா? இந்த வழக்கறிஞர்களின் வழக்காடும் உரிமை ரத்து செய்யப்படாவிட்டால், நாங்கள் வழக்குகளை விசாரிப்பதில்லை என்று நீதிபதிகள் அறிவிப்பார்களா? சரி, பார் கவுன்சிலாவது, இதுபோன்ற தரங்கெட்ட செயல்களில் ஈடுபடும் வழக்கறிஞர்களின் உறுப்பினர் பதவியை ரத்து செய்து, தொழிலில் இருந்து வெளியேற்றுமா? அரசாவது, அவர்கள் மீது கிரிமினல் நடவடிக்கை தொடருமா? எதுவுமே நடக்காது என்பதுதான் நிஜம்.

நீதி கேட்டு நாம் நீதிமன்றத்துக்கு ஏன் போகிறோம்? நீதிபதி நியாயம் வழங்குவார் என்பதால். அந்த நீதிபதிக்கே மரியாதை இல்லை என்றால், மக்களுக்கு இருக்கும் அந்த நம்பிக்கையும் தகர்ந்து விடுகிறதே!

சில வழக்கறிஞர்கள் நீதிமன்றத்திற்குள் அரங்கேற்றி இருக்கும் வன்முறை, அராஜகம், ஈழத்தமிழர்கள் மீதுள்ள அனுதாபத்தையும் குலைக்கும். மக்களுக்கு நீதித்துறையின் மீதான நம்பிக்கையையும் குறைக்கும். வன்முறையில் ஈடுபட்டவர்கள் வழக்கறிஞர்களாகப் பணியாற்றும் உரிமையை ரத்து செய்து அவர்கள் மீது கிரிமினல் நடவடிக்கையைத் தொடர்வதுதான், இனியும் இதுபோன்ற அநாகரிகம் தொடராமல் தடுக்கவும், நீதிமன்றத்தின் கண்ணியம் காப்பாற்றப்படவும் ஒரே வழி.

நன்றி: தினமணி

Tuesday, February 17, 2009

525. சுப்பிரமணிய சுவாமியைத் தாக்கி நீதிமன்றத்தில் வழக்கறிஞர்களின் அராஜகம்

இன்று, ஜனதா தள கட்சி தலைவர் சுப்பிரமணியசுவாமி, அவரது புலி எதிர்ப்பு நிலைப்பாட்டுக்காக, சென்னை உயர்நீதிமன்றத்தில், நீதிபதி முன்னிலையில் தாக்கப்பட்டுள்ளார். சட்டத்தைக் காப்பாற்ற வேண்டியவர்கள், சட்டத்தைக் கையில் எடுத்துக் கொண்டு, அராஜகத்தில் ஈடுபடுவது, கடுமையான கண்டனத்துக்குரியது. சமூகத்தில், சட்டத்தை மதித்து முன்மாதிரியாக இருக்க வேண்டிய வழக்கறிஞர்கள், பொது மக்களுக்கு சட்டத்தின் மீது இருக்கும் மரியாதையை குலைக்கும் வண்ணம் நடந்து கொண்டுள்ளனர்.

பொதுவாகவே, இவர்களின் சமீபகால நடவடிக்கைகள் எதுவும் சிலாக்கியமாக இல்லை. எதற்கெடுத்தாலும், வேலை நிறுத்தம், நீதிபதிகளையே கேரோ செய்தல் என்று பலவற்றைக் கூறலாம். அரசியல் கட்சிகளை சார்ந்து பல வழக்கறிஞர்கள் செயல்படுவதே இதற்கு முக்கியக் காரணம். வழக்கறிஞர் தொழில் என்பது அரசியல் சாரா தொழிலாக மேற்கொள்ளப்பட வேண்டும்.

சு.சுவாமியின் ஈழப்பிரச்சினை குறித்த கருத்துகள் எனக்கும் ஏற்புடையதல்ல. சில சமயங்களில் உளறுகிறார் என்று கூட சொல்லலாம். அதற்காக, அவர் மீது வன்முறையை பிரயோகிப்பதை ஏற்றுக் கொள்ளவே முடியாது. கருத்துரிமையை மதிக்காத இந்த போக்கு, மோசமான விளைவுகளை ஏற்படுத்தும் :-(


செய்தி கீழே:

எ.அ.பாலா

***************************
சென்னை, பிப் 17 (டிஎன்எஸ்) சென்னை உயர்நீதிமன்றத்தில், நீதிபதி முன்னிலையில் ஜனதா தள கட்சி தலைவர் சுப்பிரமணிய சுவாமி மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. மேலும் அவர் மீது அழுகிய முட்டைகளையும் வீசி ரகளையில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

சிதம்பரம் கோயில் தொடர்பாக தாக்கல் செய்யப்பட்ட மனு விசாரணைக்கு சுப்பிரமணியம் சுவாமி நீதிமன்றத்தில் ஆஜராகியிருந்தார். அப்போது திடீரென கோர்ட்டுக்குள் நுழைந்த வழக்கறிஞர்கள், இலங்கை தமிழருக்கு எதிராக பேசுவதால் சுப்பிரமணிய சுவாமியை தாக்கியதாக அவர்கள் கோஷமிட்டனர். தங்கள் கண் முன்னிலையிலேயே தாக்குதலில் ஈடுபட்ட வக்கீல்கள் மீது நடவடிக்கை எடுக்குமாறு நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

சிதம்பரம் நடராஜர் கோவிலை, தீட்சிதர்கள் பிடியிலிருந்து மீட்கும் வகையில் கோவில் நிர்வாகத்தை அரசே ஏற்க வேண்டும் என நீண்ட காலமாக கோரிக்கை இருந்து வந்தது.

தீட்சிதர்களால் கோவிலில் தேவாரம், திருவாசகம் ஆகிய பாடல்களைப் பாட முடியாத நிலையும் இருந்து வந்தது. இதுதொடர்பாக சிவனடியார் ஆறுமுகச்சாமி தலைமையில் நீண்ட காலமாக போராட்டமும் நடைபெற்று வந்தன.

இந் நிலையில், சமீபத்தில் சிதம்பரம் நடராஜர் கோவிலை தமிழக அறநிலையத்துறை கட்டுப்பாட்டுக்கு அரசு கொண்டு வந்தது. இதை சென்னை உயர்நீதிமன்றம் அங்கீகரித்தது.

இந்த நிலையில் அரசின் இந்நடவடிக்கையை எதிர்த்து தீட்சிதர்கள் தரப்பில் மனு தாக்கல் செய்யப்பட்டிருந்தது. தன்னையும் இந்த வழக்கில் சேர்த்துக்கொள்ளுமாறு கோருவதற்காக டாக்டர் சுப்பிரமணியம் சுவாமி நீதிமன்றத்திற்கு வந்திருந்தார். அப்போது சில வழக்கறிஞர்கள், சுப்பிரமணியம் சுவாமியின் இலங்கை கருத்துக்களை ஆட்சேபித்து குரல் எழுப்பியவண்ணம் அவர் மீது அழுகிய முட்டைகளை வீசினார்கள்.

தங்கள் முன்பாகவே இந்த சம்பவம் நடைபெற்றதை கண்டித்த நீதிபதிகள், முட்டைகளை வீசி தாக்குதல் நடத்தியவர்கள் மீது உடனடி நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று காவல் துறைக்கு உத்தரவிட்டனர்.

அவரைப் பார்த்த, இலங்கைப் பிரச்சினை தொடர்பாக வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள வக்கீல்கள் சிலர் ஆவேசமாக ஓடி வந்தனர்.

சுப்பிரமணியம் சுவாமியை காவல் துறையினர் பாதுகாப்பாக அவரது கார்வரை அழைத்து சென்று விட்டார்கள். (டிஎன்எஸ்)
******************************************

நன்றி: Chennaionline.com

Tuesday, February 10, 2009

524. பெண் புலி நடத்திய தற்கொலை படை தாக்குதல்

ஈழத்தமிழர் பிரச்சினை உலக நாடுகளின் கவனத்திற்கு வந்து, போர் நிறுத்தத்திற்கு இலங்கைக்கு பல தரப்பிலிருந்தும் நெருக்கடி தரப்பட்டுக் கொண்டிருக்கும் சூழலில், புலிகள் இப்படியொரு தற்கொலைத் தாக்குதலை நடத்தியிருக்க வேண்டாம். எது எப்படியிருப்பினும், இது வன்மையாக கண்டிக்கத் தக்கது. போரைத் தொடர இலங்கை அரசுக்கும், சிங்கள வெறியர்களுக்கும் ஒரு காரணம் கிடைத்து விட்டது. மேலும், அப்பாவித் தமிழர்கள் பலியாவார்கள் :-(

எ.அ.பாலா
***************************************

பிற்சேர்க்கை:

என்னை ஆபாசமாகத் திட்டி இப்பதிவை நீக்கும்படி ஒரு பின்னூட்டம் வந்தது. ஐபி முகவரியை பத்திரமாக வைத்திருக்கிறேன்!

பிரச்சினை என்னைத் திட்டியது பற்றி அல்ல! நான் சொல்ல வந்ததின் நோக்கம் புரியாமல், நான் என்னவோ சிங்கள அரசு செய்ததற்கு/செய்து வருவதற்கு நியாயம் கற்பிக்கும் வகையில் எழுதியிருப்பதாக சிலருக்குத் தோணலாம்! நிச்சயம் உண்மை அதுவல்ல! இலங்கை அரசை ஆதரிப்பதற்கு எனக்கு எந்த முகாந்திரமும் கிடையாது!

முதலில் இருந்தே, ஈழப் பிரச்சினையில் இந்திய அரசின் அக்கறையின்மை குறித்தும், போர் நிறுத்தத்தின் அவசியம் குறித்தும் நான் தொடர்ந்து எழுதி வருவதை என் வலைப்பதிவை வாசிக்கும் நண்பர்களும், டிவிட்டர் (twitter.com) நண்பர்களும் அறிவார்கள். சிங்கள ராணுவத்தின் வெறி அப்பாவி தமிழ் மக்கள் மேல் தீவிரமாகத் திரும்புமே என்ற ஆதங்கத்தில் தான் நான் எழுதியது. சிலர் திரிக்க முனைகிறார்கள் :-(

டமில்நெட் தளத்தில், Reports from Vanni indicate that the civilian casualties at the military checkpost claimed as 'IDP rescue centre' by the Sri Lanka Army (SLA) was in fact due to gunfire at the civilians by the SLA after a bomb blast, according to civilians who escaped the scene back to LTTE territory என்று கூறப்பட்டுள்ளது. அதாவது, சிவிலியன் உயிரிழப்புக்கு சிங்கள ராணுவமே காரணம் என்று சொல்லப்பட்டுள்ளது.

புலிகளால் பட்ட பாட்டை விட, இலங்கை அரசால், ஈழத்தமிழர்கள் பல காலமாக பல இன்னல்களைச் சந்தித்துள்ளனர் என்பதே என் கருத்து. போர்/வன்முறை நிரந்தரத் தீர்வை ஒருபோதும் ஏற்படுத்தாது. பேச்சுவார்த்தை மூலமே, தீர்வு காண முடியும். இந்தியா தலையிட விரும்பாத நிலையில், அமெரிக்கா/பிரிட்டன்/கனடா உருப்படியாக ஏதாவது செய்ய முன் வந்தால் மகிழ்ச்சியே.

எ.அ.பாலா

***********************************************
கொழும்பு: இலங்கையில் பெண் விடுதலைப் புலி நடத்திய தற்கொலைப் படை தாக்குதலில், ராணுவ வீரர்கள் 20 பேர் உட்பட 28 பேர் பலியாயினர்; 50க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.இலங்கையில் புலிகளுக்கும், ராணுவத்தினருக்கும் இடையே கடும் சண்டை நடந்து வருகிறது. இப்படி சண்டை நடக்கும் பகுதியில் இருந்து பொதுமக்கள் பலர் கூட்டம் கூட்டமாக வெளியேறி வருகின்றனர். கடந்த சில நாட்களில் 18 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் வெளியேறியுள்ளனர்.போர் நடக்கும் பகுதியில் இருந்து வெளியேறி வருபவர்களை விசாரித்து, பாதுகாப்பான இடத்தில் தங்க வைப்பதற்காக, ராணுவ கட்டுப்பாட்டுப் பகுதியில் சோதனைச் சாவடி ஒன்று அமைக்கப்பட்டுள்ளது. விஸ்வமடு அருகே சுந்தராபுரம் என்ற இடத்தில் உள்ள சோதனைச் சாவடி வழியாக நேற்று பலர் சென்று கொண்டிருந்தனர்.

அப்போது அப்பாவி மக்களோடு ஊடுருவி வந்த பெண் விடுதலைப் புலி ஒருவர், சோதனைச் சாவடி அருகே வந்ததும், தன் உடலில் கட்டியிருந்த பயங்கர குண்டுகளை வெடிக்கச் செய்தார்.இதில், அதிகாரிகள் இருவர் உட்பட ராணுவத்தினர் 20 பேர் பலியாயினர்; அப்பாவி தமிழ் மக்கள் எட்டு பேர் இறந்தனர். இதுதவிர, 50 தமிழர்கள் காயமடைந்தனர். இவர்களில் பலர் பெண்கள் மற்றும் குழந்தைகள்.காலை 11.30 மணியளவில் இச்சம்பவம் நடந்தது. முல்லைத் தீவு அருகே போர் முனையில், கடந்த சில நாட்களாக இதுபோன்ற தாக்குதல்களை நடத்த புலிகள் பலமுறை முற்பட்டனர்.இருந்தாலும், அவர்களின் முயற்சி முறியடிக்கப்பட்டது. ஆனாலும் நேற்று அவர்கள் தங்களின் தாக்குதலை நடத்தி விட்டனர். இந்த மாதத்தில் புலிகள் நடத்திய மிகப்பெரிய தாக்குதல் இதுதான் என்பது குறிப்பிடத்தக்கது.

தாக்குதல் தொடர்பாக முதல் கட்டமாக கிடைத்த தகவல்களில் 28 பேர் இறந்ததாகவும், 50 பேர் காயமடைந்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால், இறப்பு மற்றும் காயமடைந் தோர் எண்ணிக்கை மேலும் அதிகரிக்கலாம் என நம்பப்படுகிறது.தற்கொலைப் படை தாக்குதல் நடந்ததும், அந்த இடத்தை பாதுகாப்புப் படையினர் சுற்றிவளைத்தனர். மருத்துவக் குழுவினரும் அங்கு விரைந்தனர். காயமடைந்த பலர் கிளிநொச்சியில் உள்ள மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளனர்.கடந்த 4ம் தேதி யானையிறவு அருகே சாலை என்ற இடத்தில், 13 வயது சிறுமி மூலம் தற்கொலைப் படை தாக்குதலை நடத்த புலிகள் திட்டமிட்டனர்; ஆனால், அந்த முயற்சி முறியடிக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

"தமிழ் மக்களை நாங்கள் காப்பாற்ற முற்படுகிறோம். ஆனால், புலிகள் அதைச் செய்ய விடுவதில்லை. அப்பாவி மக்கள் மத்தியில் தற்கொலைப் படை தாக்குதலை நடத்தி அவர்களைக் கொன்றுள்ளனர். இதுபோன்ற கொடூரமான தாக்குதல்களை நடத்த விடுதலைப் புலிகளின் "கரும் புலிகள்' தான் பயன் படுத்தப்பட்டு வருகின்றனர்' என, இலங்கை மீடியாத் துறை அமைச்சர் அனுரா பிரியதர்ஷனா யபா கூறினார்.

நன்றி: தினமலர்

Monday, February 09, 2009

523. ஒரு ஆடு ஒரு காக்கை

இடத்தைக் கொடுத்தால்


மடத்தைப் பிடிப்பது இது தானா? ;-)

Sunday, February 08, 2009

522. கலைஞர் டிவி வாழ்க!

சேனல் சர்ஃபிங்க்கு நடுவில் 'மானாட மயிலாட' நிகழ்ச்சியில் 4-5 நிமிடம் நின்றேன்.. ஒரு போட்டிக் குழு சிறப்பாக பரதநாட்டியத்தில் சிவநடனம் ஆடி முடித்த பின் அது பற்றி நடுவர்கள் பேச ஆரம்பித்தனர்..

நடுவர்களில் ஒருவரான ரம்பா சிவ நடனங்களின் வகைகள் பற்றிச் சொல்ல ஆரம்பிக்க, கலா மாஸ்டர் ஓ உங்களுக்கு மந்திரம் எல்லாம் தெரியுமா என்று கேட்க, ரம்பா கொஞ்சம் வெட்கப் பட்டுக் கொண்டு அப்படி எல்லாம் ஒண்ணும் இல்ல, ஆனால் நான் சிவ பக்தை என்றார்.. உடனே கலா மாஸ்டர் நீங்கள் கூறி வழிபடும் மந்திரம் ஒன்றை எங்களுக்காக சொல்லித் தான் ஆகவேண்டும் என்று ரொம்பவே வற்புறுத்தினார்..

உடனே, ரம்பா தன் இருக்கையிலேயே கண்களை மூடி, கைகளைக் குவித்து இதழில் தவழந்த மந்தஹாசம் மறையாமல், சொல்ல ஆரம்பித்தார்.. "சதுர்பி: ஸ்ரீகண்டை: சிவயுவதிபி:" என்ற சௌந்தர்ய லஹரி சுலோகத்தை பக்தி பாவத்துடனும், சில உச்சரிப்புப் பிழைகளுடனும் சொன்னார்..

அதற்குப் பிறகு 28 சிவ தத்துவங்களைக் கூறும் மந்திரம் ஒன்றையும் சொல்லி முடித்தார். பிறகு சில நொடிகள் கழித்து கண் திறந்தார்.

கலா மாஸ்டர் கரகோஷம் செய்தார். பார்வையாளர்கள் அதில் இணைந்தனர். நல்ல கடவுள் பக்தி இருக்கும்மா உனக்கு, ரொம்ப நல்ல விஷயம் என்று கலா மாஸ்டர் ஆசிர்வதித்தார்.

இந்த நிகழ்ச்சியில், இப்படி ஒரு சம்பவம், நான் எதிர்பார்க்கவில்லை. மகிழ்ச்சியாக இருந்தது.

தங்கள் இந்துத் தன்மையை எந்தக் தயக்கமும் இல்லாமல் பிரபலங்கள் வெளிப்படுத்திய இந்த நிகழ்ச்சி வந்தது .... கலைஞர் டிவியில்! வாழ்க!

Saturday, February 07, 2009

ஈழமும் துரோகமும் - கி.அ.அ.அனானி


கி அ அ அனானியிடமிருந்து ரொம்ப நாளைக்குப் பிறகு ஒரு மேட்டர் மெயிலில் வந்தது, அவர் ஸ்டைலில் "துரோகம்" மற்றும் "பிராப்பர்டி ரைட்" குறித்து ஒரு விளாசல். எப்போதும் போல் கொஞ்சம் எடிட் பண்ண வேண்டியிருந்தது, ஆனால் சூடு குறையாத வகையில் :) மேட்டரைப் பதிந்ததற்கான காரணம், பழசு தான், அதாவது கருத்துச் சுதந்திரம் !!! கி அ அ அ மேட்டர் கீழே, வாசிக்கவும்.
எ.அ.பாலா
************************************************

இலங்கையில் போரும் படுகொலைகளும் உச்சத்தை அடைந்து கொண்டிருக்கும் வேளையில் நடந்த / நடக்கும் துரோகங்களெல்லாம் போதாதென்று, நடந்ததையெல்லாம் தொகுத்து ஒரு அறிக்கையாக வெளியிட்டிருக்கிறார் முதல்வர். பாவம்.. அவரும் என்ன செய்வார் , சுமார் 50 வருடங்களாக நடப்பது போல் "நெருப்பு பற்றி எரியும் பின் தானாக அடங்கி நீறு பூத்து விடும். பின் தனக்குத் தேவையான போது ஊதிப் பெரிதாக்கிக் கொள்ளலாம்" என்று எப்போதும் போல் கனவு கண்டு கொண்டிருந்தவரின் கனவில் மண்ணைப் போடும் படியாக தொடர்ந்து சம்பவங்கள் அரங்கேறி வருகின்றன. இன்று அவரது ஆதரவாளர்களே வெறுத்துப் போகும் படியான அறிக்கைகளையும் ,அரசியல் நாடகங்களையும் அரங்கேற்றுவதில் முனைந்துவிட்டார்.

இதன் உச்ச கட்டம்தான் முதல் எதிரியாகக் கருதியவரையும், துரோகி, முதுகில் குத்தியவன், தமிழன் இல்லை என்று இருந்த மட்டும் வாய்க் கொழுப்போடு வசை பாடிவிட்டு இன்று வாய் கூசாமல் "எனது நண்பர் எம் ஜி ஆர் " என்று சொந்தம் கொண்டாடுவதும், தங்களது முயற்சியாலே தான் ஐநாவும் ,அமெரிக்காவும், இங்கிலாந்தும் ,ஜப்பானும் அறிக்கைகள் விட்டு இலங்கைக்கு அழுத்தம் கொடுக்கின்றன என்று எழுதுவதும்.

இப்படி அடுத்தவர் செய்ததை எல்லாம் , ஏதோ தன்னால் தான் நடந்தது என்று இவர் சொல்வது புதிதல்ல என்றாலும், தனது இன மக்களுக்காக உலகில் பல்வேறு நாடுகளில் உழைத்து வரும், ஆதரவு திரட்டும், போராட்டம் நடத்தும் புலம் பெயர்ந்த இலங்கைத் தமிழர் முயற்சிகளை, சரியோ தவறோ இதற்காக தன்னுயிரைத் தந்த முத்துக்குமார் போன்ற இளைஞர்களது அளவிட முடியாத தியாகங்களை, இதை விட கேவலமாக களவாடவும், கொச்சைப் படுத்தவும் முடியுமா என்பது சந்தேகமே.

அடுத்து ஆட்சியைத் துறக்க வேண்டாம் என்று இலங்கைத் தமிழர்களே கடிதம் மூலம் சொன்னார்களாம்!!! அதனால்தான் ஆட்சித் துணியை இன்னும் கட்டிக் கொண்டிருக்கிறாராம். முதலில் இவரை ஆட்சியை துறக்கத் தயார் என்று அறிக்கை விடச் சொல்லி யாராவது வற்புறுத்தினார்களா என்ன? ஆட்சியைத் துறக்கவும் தயார் என்று மூச்சுக்கு முன்னூறு தடவை வெற்றுச் சவடால் அடிக்கிறீர்களே , இன்னும் ஒரு புல்லையும் பிடுங்கவில்லையே என்றுதான் கேட்கிறார்கள், அதற்காக "உருப்படியான" முன் முயற்சி ஏதேனும் எடுக்கப் பட்டுள்ளதா என்ற கேள்வி எழுவது ஞாயம் தானே?

அடுத்ததாய் இந்த மத்திய அரசின் பதவிக் காலம் முடிந்து, அடுத்த தேர்தலும் முடிந்த பின், இவர் மத்தியில் பதவியைப் பகிர்ந்தோ அல்லது எதிர்க் கட்சியாகவோ விடப் போகும் அறிக்கைகளுக்காக இளிச்சவாய்த் தமிழன் "கண்கள் பனிக்க, நெஞ்சம் இனிக்க" காத்துக் கொண்டு தான் இருக்கப் போகிறான். வேறென்ன செய்வான்? கழுதைக்கு வாக்கப் பட்டால்...என்ற பழமொழியச் சொன்னவனும் தமிழன்தானே.

இதில் கருணாநிதியைத் திட்ட, எங்களுக்கு மட்டுமே உரிமை இருக்கிறது, வேறு எவனுக்கும் உரிமை இல்லை என்று அவனவன் இணையத்தில் "ப்ராபர்டி ரைட்" கொண்டாடிக் கொண்டு நெஞ்சு விம்ம ஒப்பாரி வைக்கிறான்கள். அடுத்த லெவல் அடிப்பொடிகள் அதற்கு அமாம் ஆமாம் என்று பின்னூட்ட ஜால்ரா தட்டுகின்றன.

எவனுக்கும் ரைட் இல்லை என்று சொல்லும் "அவனுக்கு" இந்த இடத்தில் ஒரு வார்த்தை. "திட்டுறவன் எப்பவும் போல கன்ஸிஸ்டண்டா திட்டிக் கொண்டுதான் இருக்கிறான், நீ தான் முன்னாடி கண்னை மூடிக்கிட்டு ஜால்ரா அடித்துக் கொண்டு இருந்தாய். இப்போது காலத்தின் கட்டாயத்தினால் கொஞ்சம் "தெளிஞ்சு" திட்ட ஆரம்பித்து இருக்கிறாய். சுய மூளையோட சிந்திக்கிறவன் , ரெகுலரா திட்டுரவன் வேணுமுன்னா உன் மேல ப்ராபர்டி ரைட் கேஸ் போடலாம். என் வேலையை நீ ஏண்டா செய்கிறாய்" என்று.


இப்படி 'திட்ட உரிமை' கொண்டாடும் தொண்டரடிப் பொடிகளுக்கும், பரம்பரையாக பராமரிப்பதால் கோயில் தங்களுக்கு "மட்டுமே" சொந்தம் என்று "பிராப்பர்டி ரைட்" பேசும் சிதம்பரம் தீட்சிதர்களுக்கும் ஒரு வித்தியாசமும் தெரியவில்லையே, அம்பலவாணா ? ;-)



கி அ அ அனானி

Tuesday, February 03, 2009

520. அண்ணன் எப்போது சாவான், திண்ணை எப்போது காலியாகும்

சென்னை: இலங்கைத் தமிழர்கள் அனைத்து நல உரிமைகளையும் பெற தேவையான நடவடிக்கை எடுக்கக் கோரி தமிழகம் முழுவதும் பேரணிகள், கூட்டங்கள், மாநாடுகள் நடத்தப்படும் என திமுக செயற்குழுவில் தீர்மானம் போடப்பட்டுள்ளது.

இலங்கைப் பிரச்சினை தமிழகத்தில் விஸ்வரூபம் எடுத்துள்ளது. இலங்கையில் உடனடியாக போர் நிறுத்தம் அமல்படுத்தப்பட வேண்டும் என தமிழக சட்டசபையில் இருமுறை தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

கடைசியாக நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தை மத்திய அரசுக்கு இறுதி வேண்டுகோள் என முதல்வர் கருணாநிதி தெரிவித்திருந்தார்.

இதற்கும் மத்திய அரசு செவி சாய்க்காவிட்டால், திமுக செயற்குழுவைக் கூட்டி முக்கிய முடிவு எடுக்கப்படும் என அவர் தெரிவித்திருந்தார்.

இந்த நிலையில் இன்று திமுக செயற்குழு கூடியது. இக்கூட்டத்தில் முதல்வர் கருணாநிதி பங்கேற்றார். சில நாட்களாக உடல் நலக்குறைவால் அவர் மருத்துவமனையில் ஓய்வெடுத்து வருகிறார்.

ஓய்வு கட்டாயம் தேவை என டாக்டர்கள் வலியுறுத்தியுள்ள போதிலும், இன்றை கூட்டத்தில் பங்கேற்க அவர் உறுதியாக இருந்தார்.

இதையடுத்து இன்று காலை அண்ணா நினைவு நாள் நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். பின்னர் அமைச்சரவைக் கூட்டத்தில் பங்கேற்றார்.

இதை முடித்துக் கொண்டு அண்ணா அறிவாலயம் வந்த முதல்வர் அங்கு திமுக செயற்குழுக் கூட்டத்திற்கு தலைமை தாங்கினார்.

கூட்டத்தில் அமைச்சர்கள் அன்பழகன், மு.க.ஸ்டாலின், ஆற்காடு வீராசாமி, முன்னாள் மத்திய அமைச்சர் தயாநிதி மாறன், தென் மண்டல திமுக அமைப்புச் செயலாளர் மு.க.அழகிரி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

இக்கூட்டத்தில், இலங்கைத் தமிழர் பிரச்சினைக்காக தீக்குளித்து உயிர் நீத்த முத்துக்குமாருக்கு இரங்கல் தெரிவித்து முதலில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

அடுத்து, இலங்கைத் தமிழர்களுக்கு நல உரிமைகளைப் பெற்றுத் தர ஒத்தக் கருத்துடைய அரசியல் கட்சிகள், சான்றோர்களைத் திரட்டி பட்டி தொட்டியெங்கும் விளக்கக் கூட்டங்கள், பேரணிகள், மாநாடுகளை நடத்த தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

இலங்கையின் வடக்கு, கிழக்கு மாகாணங்களில் முழுமையான சுயாட்சி மற்றும் முழுமையான அதிகாரப்பகிர்வு ஆகியவை கிடைக்கும் வகையில் குறிப்பிட்ட காலத்திற்குள், அரசியல் தீர்வு காண மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

இந்தக் கோரிக்கைகளை வலியுறுத்தி 7ம் தேதி சென்னையில் பிரசார கூட்டம் மற்றும் பொதுக் கூட்டம் நடைபெறும். பிற மாவட்ட தலைநகரங்களில் 8 மற்றும் 9 ஆகிய தேதிகளில் நடத்தப்படும் என தீர்மானிக்கப்பட்டது.

கூட்டத்திற்குப் பின்னர் செய்தியாளர்களை முதல்வர் சந்தித்தார்.

அப்போது அவர் பேசுகையில், அண்ணன் எப்போது சாவான், திண்ணை எப்போது காலியாகும் என்று சிலர் நினைக்கிறார்கள். அண்ணனும் சாக மாட்டான். திண்ணையும் காலியாகாது.

திமுகவையும், காங்கிரஸையும் பிரிக்க முயற்சிக்கிறார்கள். அந்த சிலரின் சதி பலிக்காது. அதேபோல பந்த் நடத்தி அரசைக் கலைக்கவும் முயற்சிக்கிறார்கள் என்று முதல்வர் குற்றம் சாட்டினார்.


நன்றி: தட்ஸ்டாமில்.காம்

நன்றி நண்பரே !

வருகை தந்தமைக்கு நன்றி! உங்கள் மேலான கருத்துக்களை எதிர்பார்க்கிறேன்!
Related Posts with Thumbnails